மதுரை | ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத அசைவ திருவிழா - சுமார் 1000 கிலோ கறி விருந்து படையல்!
மதுரை திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத அசைவ திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.
மதுரை, திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம்
கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆண்கள் மட்டும் பங்கேற்பார்கள். இந்த திருவிழாவிற்காக கோயிலை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பு நிற கிடாய்களை நேர்த்தி கடனாக செலுத்துவார்கள். இந்த திருவிழாவில் நேற்று (ஜன. 3) நள்ளிரவு 1 மணிக்கு கோயிலில் கிடாய்கள் வெட்டப்பட்டது.
இந்த திருவிழாவில் 4000 கிலோ அரிசி மற்றும் 56 கிடாய்கள் வெட்டப்பட்டு 1000 கிலோ கறி சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டது. அதை ஆண்கள் மட்டும் சமைத்து சாப்பிட்டனர். இதற்காக கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
மேலும் கறி விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்த பின்னர் ஒரு வாரம் கழித்து பெண்கள் அந்த பகுதிக்கு சாமி கும்பிட வருவார்கள். இந்த விநோத திருவிழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.