சென்னை பல்கலை. துறை தலைவர்கள் நியமனத் தகுதி தொடர்பான வழக்கு - தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம் தகுதி திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமிக்க வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம் தகுதி திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமிக்க வகை செய்யும் வகையில், பல்கலைக் கழக விதியில் கடந்த 2023ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்ததிற்கு பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் ஒப்புதல் அளித்தது. இந்த திருத்ததை எதிர்த்து கிரிமினாலஜி துறையின் தலைவரும் பேராசிரியருமான எம்.ஶ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் இன்று(பிப்.25) விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், “பல்கலைக் கழகத்தின் குறிப்பிட்ட துறையில் தகுதி அடிப்படையில் இருக்கக்கூடிய மூத்த பேராசிரியர்கள் அனைவருக்கும் துறை தலைவர் பதவியை வகிக்க சம வாய்ப்பு வழங்க இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது சம்மந்தபட்ட துறையின் மேம்பாட்டுக்கு உதவும், துறை தலைவர் என்பது பொறுப்பு. இது பதவி உயர்வு அல்ல, அதேபோல பேராசிரியருக்கு என்ன பணி நிபந்தனை உள்ளதோ அதே நிபந்தனை தான் துறை தலைவருக்கும் உள்ளது. அதிக ஊதியம் கிடையாது. அவ்வாறு இருக்கும் போது, இந்த விதிகளின் திருத்தம் செய்தது என்பதில் எந்த விதி மீறலும் இல்லை.
திருத்ததிற்கு முந்தைய காலத்தில் பேராசிரியர் ஒருவர் துறை தலைவராக இருந்தால், பணி ஓய்வு பெறும் வரை துறை தலைவராக தான் இருப்பார். இதனால் மற்ற மூத்த பேராசிரியர்களுக்கு துறை தலைவர்களின் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த திருத்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்பதால், இதில் தலையிட முடியாது” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.