For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

12:38 PM Jun 16, 2024 IST | Web Editor
எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்   மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு
Advertisement

நாய்களின் உளவியல் குறித்தும், அவற்றின் நடத்தைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே, அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் சில நாய் இனங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கெனல் கிளப் ஆஃப் இந்தியா (கே.சி.ஐ) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய்களான பிட்புல், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டஃபோர்டு டெரியர், ராட் வீலர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல் டாக்,போர் போல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காக்கேஷியன் ஷெபர்டு, தெற்காசிய ஷெஃபெர்ட், உல்ஃப் டாக்ஸ் உள்ளிட்ட நாய் வகைகளை இந்தியாவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.  இந்த உத்தரவுக்கு பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில், வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், சமீபத்தில் சிறுமியைக் கடித்ததாக ராட் வீலர், பாக்ஸர் நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பாக்ஸர் நாய் விளையாட்டுத்தனமான நாய் வகை எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, லேப்ரேடர் நாயும் குழந்தையை கடித்ததாக செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டி, அதற்காக லேப்ரேடர் நாயை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என கூற முடியாது எனவும், அறிவியல்பூர்வமான ஆய்வுக்குப் பிறகு எதையும் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,  தடை செய்யப்பட வேண்டிய நாய்களை வகைப்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நாய்களின் உளவியல் குறித்தும், அவற்றின் நடத்தைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags :
Advertisement