மடப்புரம் காவலாளி கொலை வழக்கு - 5 காவலர்களுக்கு ஆகஸ்ட் 29 வரை காவல் நீட்டிப்பு!
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் கடந்த நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த 28 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுதியது.
இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா , ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏற்கனவே 3 முறை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்திருந்தது. இந்த நிலையில் 4 வது முறையாக மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றம் நீதிபதி செல்வபாண்டி 5 பேருக்கும் ஆகஸ்ட்.29 ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார்.