"கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
தேனி மாவட்டத்தின் இரண்டு நாள் பிரச்சார சுற்றுப்பயண நிறைவாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேனி மாவட்டம் அதிமுக கோட்டை எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுக வெற்றிக்கு வித்திட்ட மாவட்டம் தேனி.
விவசாயிகள் மீது திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேசி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கை வேண்டும். திமுக ஆட்சியில் காவலர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. அரசியல் தலையீடு
அதிகம் இருப்பதால் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
போதைப்பொருள் விற்பனை குறித்து தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் பலமுறை எச்சரித்தேன். ஆனால் அதனை முதலமைச்சர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை இன்று தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது. திமுக தேர்தல் அறிவிப்பில் அறிவித்ததை 98 சதவீதம் நிறைவேற்றியதாக கூறி மக்களை
ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலம் தமிழகம் தான்" என்று தெரிவித்துள்ளார்.