மு.க.முத்து மறைவு: இரங்கல் கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், பிரபல பாடகரும், நடிகருமான மு.க.முத்து, உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு, தமிழக அரசியல் மற்றும் கலை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும், கலைஞர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மறைந்த தனது அண்ணன் மு.க.முத்துவின் இறுதி அஞ்சலிக்கு நேரில் வந்து ஆறுதல் கூறிய சகோதரர் செல்வப்பெருந்தகை, தோழர் கே.பாலகிருஷ்ணன், சகோதரர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, வசீகரன், சகோதரர் துரை வைகோ, சகோதரி தமிழிசை சௌந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நடிகர்கள் சத்யராஜ், விக்ரம் உள்ளிட்ட கலையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கலைப் பகிர்ந்துகொண்ட சகோதரர் ராகுல் காந்தி, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோருக்கும், தனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்தார்.