வசூலை அள்ளும் #LuckyBaskhar… 3 நாட்கள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடிப்பில் உருவான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.39.9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். அவரது நடிப்பில் வௌியான ‘சீதா ராமம்’ திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இத்திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி வெளியீடாக நேற்று முன்தினம் (அக். 31) வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாதாரண நபராக இருக்கும் நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறுவதை கதையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தில் வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.39.9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு, தமிழ்நாட்டில் முதலில் 150 திரைகளில் மட்டுமே கிடைத்தது. படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இப்படம் 220 திரைகளில் கூடுதலாக திரைகளில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .