குஜராத்தை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி!
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 64வது போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதையடுத்து சாய் கிஷோர் வீசிய 10வது ஓவரில் ஐடன் மார்க்ராம் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஒரு முனையில் மிட்செல் மார்ஷ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 117 ரன்களில் அவுட்டானார். அதன் பின்னர், நிக்கோலஸ் பூரன் தனது பங்கிற்கு அரைசதம் விளாசினார். ஆட்டத்தின் இறுதியில், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 235 ரன்கள் குவித்துள்ளது.
இதனையடுத்து 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கியது. இதில் குஜராத்தில் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் ( 21 ரன்கள்), சுப்மன் கில் (35), ஜோஸ் பட்லர் ( 33) என சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 202 மட்டுமே குஜராத் அணி எடுத்தது.
இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. பிளே ஆப் சுற்றில் வெளியேறியுள்ள லக்னோ அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. தொடர்ந்து 13 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.