வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று இரவு அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அது வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஒடிசா கடற்கரையை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.