காதலுக்கு எல்லையில்லை... பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் கரம்பிடித்த பாஜக பிரமுகர் மகன்!
விசா பிரச்னையால், பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவரை உத்தப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக பிரமுகரின் மகன் ஆன்லைனில் திருமணம் செய்துள்ளார்.
காதலுக்கு எல்லை இல்லை என பலர் கூறியும், திரைப்படங்களில் வசனங்கள் இடம்பெற்றும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் எல்லைத் தாண்டி ஆன்லைனில் திருமணம் செய்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் முகமது அப்பாஸ்- ஆன்ட்லீப் ஜாஹ்ரா ஜோடி.
உத்தப்பிரதேச மாநிலம் பாஜக கவுன்சிலரான தஹ்சீன் ஷாஹித்தின் மகன் முகமது அப்பாஸ் ஹைதருக்கும், பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த ஆன்ட்லீப் சஹ்ரா என்பவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக, இரு நாட்டின் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களால் ஜாஹ்ராவுக்கு விசா வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே மணப்பெண்ணின் தாயார் ராணா யாஸ்மின் ஜைதியின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்துள்ளது.
இதனால் திருமணத்தை விரைந்து முடிக்க வேண்டும் என இருதரப்பினரும் எண்ணியுள்ளனர். இதனையடுத்து வேறு வழியின்றி திருமணத்தை ஆன்லைனில் நடத்த முடிவு செய்து உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் (அக். 18) இரவு, ஷாஹித் இமாம்பராவில் கூடி ஆன்லைன் திருமணத்தில் பங்கேற்றார். அதே நேரத்தில் மணமகளின் குடும்பத்தினர், லாகூரில் இருந்து ஆன்லைன் இணைப்பு மூலம் கொண்டாட்டங்களில் இணைந்தனர். இருவரும் தங்கள் சபதங்களை பறிமாறி கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆன்லைன் திருணம் பற்றி பேசிய ஷியா மதத் தலைவர் மௌலானா மஹ்ஃபூசுல் ஹசன் கான், “இஸ்லாத்தில், திருமணம் செய்ய பெண்ணின் சம்மதம் இன்றியமையாதது. மேலும் மணப்பெண் தன் சம்மதத்தை மௌலானாவிடம் தெரிவிக்க வேண்டும். இரு தரப்பு மௌலானாக்கள் இணைந்து விழாவை நடத்தும் போது ஆன்லைன் திருமணம் சாத்தியமான ஒன்று தான்” என தெரிவித்தார்.