ஹிமானி நர்வால் கொலையில் 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு பொய் - உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!
This News Fact Checked by ‘Newsmeter’
மார்ச் 1 ஆம் தேதி, ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள சம்ப்லா பேருந்து நிலையம் அருகே, பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தியைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சித் உறுப்பினரான 22 வயது ஹிமானி நர்வாலின் உடல் ஒரு சூட்கேஸுக்குள் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் குற்றத்தின் பின்னணி குறித்து சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த சம்பவத்திற்கு ஒரு வகுப்புவாத கோணத்தைக் கொடுக்க முயன்றுள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர் 'லவ் ஜிஹாத்' வழக்கில் கொலை செய்யப்பட்டதாககவும் கொலையாளி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். பல பேஸ்புக் பயனர்கள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் இருந்து ஹிமானி நர்வாலின் படத்தையும், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூட்கேஸின் படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
மேலும் அப்பதிவில் "ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஹிமானி நர்வால், தீவிரவாதிகளால் கழுத்தை நெரித்து, ஒரு சூட்கேஸில் அடைத்து, ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் வீசப்பட்டார்” என்று எழுதினர்.
உண்மைச் சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலான இந்தக் கூற்று பொய்யானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சச்சின் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைத் தேடியதில், மார்ச் 3 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் லைவ் மிண்ட் வெளியிட்ட செய்தியைப் பார்த்தோம். இந்த ஊடகங்களின்படி, உடல் மீட்கப்பட்டவுடன், நர்வாலைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த மொபைல் போன் கடை உரிமையாளரான தில்லு என்றும் அழைக்கப்படும் 30 வயது சச்சினை போலீசார் விரைவாக அடையாளம் கண்டு கைது செய்தனர். சச்சினும் நர்வாலும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்ட பிறகு சுமார் 18 மாதங்களாக ஒருவருக்கொருவர் நட்பில் இருந்துள்ளனர். ரோஹ்தக்கின் விஜய் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கும் அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, பிப்ரவரி 27 அன்று, சச்சின் நர்வாலின் வீட்டிற்குச் சென்றார், அங்கு பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அவர் மொபைல் போன் சார்ஜர் கேபிளைப் பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் நர்வாலின் நகைகள், மடிக்கணினி மற்றும் மொபைல் போனை எடுத்துக் கொண்டு அவரது உடலை ஒரு சூட்கேஸில் வைத்து, சம்ப்லா பேருந்து நிலையம் அருகே வீசிவிட்டார்.
மார்ச் 4 ஆம் தேதி வெளியான டைனிக் ஜாக்ரன் அறிக்கை, சச்சினின் தந்தை தேவேந்தர் என்று அடையாளம் கண்டுள்ளது, அவருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியாது என்றும் சச்சின் திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தையாக இருந்து, ஒரே வீட்டில் பெற்றோரிடமிருந்து தனித்தனியாக வசித்து வருகிறார்.
மார்ச் 4 ஆம் தேதி இந்தியா டுடே வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் ஊழியருடன் தனக்கு நட்பில் இருந்ததாக கூறி, சச்சின் இந்தக் கொலையை ஒப்புக்கொண்டதாக ஒரு வட்டாரம் உறுதிப்படுத்தியதாகக் கூறியது.
இருப்பினும், "குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இருவருக்கும் இடையே திருமணம் குறித்து எந்தப் பேச்சும் இல்லை... ஆனால் அவர்கள் நண்பர்கள்" என்று ரோஹ்தக் கூடுதல் டிஜிபி கே.கே. ராவ் கூறியதையும் அந்த ஊடகம் மேற்கோள் காட்டியது.
"இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை இருந்தது, ஆனால் அது என்ன என்பதை சரிபார்க்க வேண்டும். அதுதான் கொலைக்கான காரணம் என்று நாங்கள் கூற முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாகவும், வார்த்தை மோதலின்போது, அவரது கழுத்தை நெரித்து கொன்றதாகவும் கூறியுள்ளார்" என்று அந்த அதிகாரி கூறியதாக அறிக்கை மேலும் மேற்கோள் காட்டியது.
நியூஸ்மீட்டர் இந்தியா டுடே நிருபர் அரவிந்த் ஓஜாவிடம் பேசியது, அவர் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் சச்சின் என்பதை உறுதிப்படுத்தினார் மேலும் 'லவ் ஜிஹாத்' அல்லது வேறு எந்த வகுப்புவாத கோணத்தின் கூற்றுகளையும் நிராகரித்தார்.
முடிவு :
ஹிமானி நர்வால் கொலை வழக்கில் 'லவ் ஜிஹாத்' என்ற கூற்று தவறானது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.