"என் உயிரினும் மேலான.." - அதே கரகர குரல்.. அரங்கம் அதிர AI மூலம் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் #Karunanidhi!
திமுகவின் பவள விழாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்த்துரை வழங்கினார்.
‘பேரறிஞர்’ அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பணி முடிப்பு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த முப்பெரும் விழா திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 80,000 தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அனைத்து இடத்திலும் இருந்து நிகழ்ச்சி மேடையை காண 18 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 170 அடி நீளத்திற்கு கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 50 அடியில் திமுக கொடி பறக்க விடப்பட்டுள்ளது பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 5,000 வாழை மரங்கள் தோரணங்களாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 11 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறைகள், ஓய்வறைகள் என பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அமர்ந்திருப்பதை போல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் நாற்காலியில் அமர்ந்திருந்தபடி ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வாழத்துரை வழங்கினார். என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என அதே கரகர குரலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியதால் அரங்கமே அதிர்ந்தது.