“இதுபோன்ற சோகமான சம்பவங்கள் பயம் கொள்ள செய்கிறது" - நடிகர் யாஷ்!
மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் யாஷ் அன்பு மனதில் இருந்தால் போதும், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டான் என கூறியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' திரைப்படத்திலன் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். கர்நாடகாவில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதையடுத்து அவரது பிறந்தநாளான ஜன.08-ம் தேதி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் யாஷ் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "ரசிகர்கள் என்னை முழுமனதாக வாழ்த்த வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள். அன்பு மனதில் இருந்தால் போதும். அதுவே எனக்கு போதுமானது.
இதையும் படியுங்கள்: இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
இதுபோன்ற துயரமான சம்பவங்கள் என்னுடைய சொந்த பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கின்றன. உங்களுடைய ரசிக மனப்பான்மையை இப்படி காட்டக் கூடாது. உங்களுடைய அன்பை தயவு செய்து இந்த வழியில் காட்டாதீர்கள். உங்கள் அனைவரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். பேனர் வைப்பதோ, பைக் ரேஸில் ஈடுபடுவதோ, ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதோ வேண்டாம்.
என்னைப் போலவே என்னுடைய ரசிகர்களும் வாழ்க்கையில் வளரவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்காகவே மட்டும் அர்ப்பணித்து பணியாற்றுங்கள். அவர்களை பெருமைப்படுத்தும் குறிக்கோளை மனதில் வையுங்கள்" என்று யாஷ் தெரிவித்தார்.