For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” - #RatanTata -வின் நெகிழ்ச்சி செயல்!

09:19 AM Oct 10, 2024 IST | Web Editor
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்”    ratantata  வின் நெகிழ்ச்சி செயல்
Advertisement

தொழில் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய ரத்தன் டாடா தனது செல்லப் பிராணிகளுக்கு ஒன்று என்றால் துடித்துப்போய்விடக் கூடியவர். செல்ல நாய்க்காக பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிகப்பெரிய கௌரவத்தையே புறந்தள்ளினார்.

Advertisement

நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. தற்போது, ரத்தன் டாடா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனது நிறுவனங்கள் மூலம் பல லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து, இந்திய தொழில்துறையில் மதிப்புமிக்க பணிகளைச் செய்த ரத்தன் டாடா போற்றுதலுக்குரியவர். இவற்றிற்கு அப்பால், அவரது மனிதாபிமான குணம், செல்லப்பிராணிகள் மீதான அவரது அன்பு மகத்தானது. தனது செல்லப் பிராணிக்காக, ரத்தன் டாடா பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மதிப்புமிக்க கவுரவத்தை நிராகரித்தார் என்பது வியக்கத்தக்கது.

தற்போதைய பிரிட்டிஷ் மன்னரும் அப்போதைய வேல்ஸ் இளவசரருமான சார்லஸ் கடந்த 2018-ம் ஆண்டு, ரத்தன் டாடாவின் சிறப்பான தொண்டு நிறுவன சேவைகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கௌரவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை நடத்திய இந்த விருது வழங்கும் விழா, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற இருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு கௌரவம் மிக்க விருதைப் பெற ரத்தன் டாடாவும் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் ரத்தன் டாடா லண்டன் கிளம்பும் நாள் நெருங்கி வந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு, லண்டன் செல்லாமல் இங்கேயே இருக்கும் முடிவை எடுத்தார். விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள லண்டன் சென்றவர்களில் ஒருவர் தொழிலதிபர் சுஹேல் சேத். இவர் பிப். 6-ம் தேதி நடந்த விழாவிற்காக 2-ம் தேதி லண்டன் சென்றார். லண்டனில் அவர் தரையிறங்கியதும் ரத்தன் டாடாவிடம் இருந்து 11 மிஸ்டு கால்கள் வந்திருந்ததை கவனித்துள்ளார். உடனே அவர் ரத்தன் டாடாவை தொடர்பு கொண்டுள்ளார்.

ரத்தன் டாடா, தனது நாய்க்கு உடம்பு முடியவில்லை, நான் அதை பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி, லண்டனுக்கு வர இயலாத தனது நிலையை விளக்கியுள்ளார். மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் எனது செல்ல நாயை விட்டுவிட்டு லண்டன் புறப்பட முடியாது என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். மேலும், பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு, தன்னால் வர இயலாததையும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார். ரத்தன் டாடா வர இயலாமல் போனதற்கான உண்மையான காரணம் மன்னர் சார்லஸு க்கு தெரியவர, அவர் ரத்தன் டாடா குறித்து பெருமையாக பேசியதாக தொழிலதிபர் சுஹேல் சேத் காணொளி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தனது இரண்டு நாய்களான டிட்டோ (ஜெர்மன் ஷெப்பர்ட்) மற்றும் டேங்கோ (கோல்டன் ரெட்ரீவர்) ஆகிய செல்லப்பிராணிகளின் மரணம் தன்னை எப்படிப் பாதித்தது என்பதைப் பற்றி ஒருமுறை பேசிய ரத்தன் டாடா, "செல்லப்பிராணிகளாக நாய்கள் மீதான எனது அன்பு எப்போதும் அதிக பிணைப்பு கொண்டது. இது நான் உயிருடன் இருக்கும் வரை தொடரும். என் செல்லப்பிராணிகள் ஒவ்வொன்றும் இறந்து போகும் போது விவரிக்க முடியாத சோகம் ஏற்படுகிறது. இயற்கையின் மற்றொரு நிகழ்வு இது என என்னால் கடந்து செல்ல முடியாது. அடுத்த 2 - 3 ஆண்டுகளுக்கு என் வீடு மிகவும் வெறிச்சோடி, அவர்கள் இல்லாமல் நான் வாழ முடியாதபடி அமைதியாகவும் மாறுகிறது" எனக் கூறி இருக்கிறார்.

வாயில்லா ஜீவன்கள் மீது அக்கறை கொண்டவர் ரத்தன் டாடா. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ‘பருவமழை காலத்தில் சாலையில் நாம் பார்க் செய்யும் கார்களை ஸ்டார்ட் செய்வதற்கு முன் அதன் கீழே ஏதேனும் விலங்குகள் உள்ளனவா என்பதை பார்க்க வேண்டும். இதன் மூலம் வீடற்ற வாயில்லா ஜீவன்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்’ என சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் ரத்தன் டாடாவின் இயக்கம் இருந்தது. மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் கடந்த 2022-ல் அவர் முதலீடு செய்தார். இதை அவரின் உதவியாளர் சாந்தனு நாயுடு நிறுவியது குறிப்பிடத்தக்கது. அதே போல முன்னாள் ஊழியர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது நேரடியாக அவர் இருப்பிடத்துக்கு சென்று நலம் விசாரித்தவர்.

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சமுக வலைதளத்தில் நெட்டிசன்கள் குரல் கொடுத்த போது அதை தவிர்க்குமாறு தனது பதிவின் மூலம் கேட்டுக் கொண்டார். விருதுகளை காட்டிலும் இந்தியனாக இருப்பதே தனது அதிர்ஷ்டம் என அப்போது சொல்லி இருந்தார்.

Tags :
Advertisement