"உடல் ஒத்துழைத்தால் #LosAngelesOlympic -இல் பற்கேற்பேன்" - மன்பிரீத் சிங்
உடல் ஒத்துழைத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன் என மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
மன்பிரீத் சிங் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இதுவரை 4 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்ற நிலையில் இரண்டு முறை பதக்கங்களை வென்றார். மேலும், மன்பிரீத் சிங் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும் இருந்தார். இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளாக பதக்கங்களை வெல்லாத நிலையில், 2020ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு பதக்கம் பெற்றுத்தந்தவர் மன்பிரீத் சிங்.
லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் 2028ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் மன்பிரீத் சிங் பங்கேற்றால், 5 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்ற நபர் என்ற சாதனையை அவர் படைப்பார். இந்த சூழலில் மன்பிரீத் சிங் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ''லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிதான் எனது இலக்கு. ஆனால் அதற்கு எனது உடல் ஒத்துழைக்க வேண்டும். எனது உடல் ஆரோக்கியத்தையும், ஆட்டத்தையும் சிறப்பாக தக்கவைக்க முடிந்தால் கட்டாயம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் என்னை பார்க்கலாம்.
நான் இதுவரை 4 ஒலிம்பிக் தொடர்களில் விளையாடியுள்ளேன். முதல் இரண்டு தொடர்களில் எந்த பதக்கத்தையும் பெறவில்லை. அடுத்த இரு தொடரிலும் பதக்கங்களைப் பெற்றேன். எந்த சூழலில் விளையாடவும் நான் தயாராக உள்ளேன். ஆட்டத்தில் நம்முடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து ஆடினாலே போதும்.''
இவ்வாறு மன்பிரீத் சிங் தெரிவித்தார்.