பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் மதன், கார்த்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!
பிரணவ் ஜூவல்லரி மூலம் ரூ.47 கோடிக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகள் திடீரென மூடப்பட்டதால், நகை சேமிப்பு திட்டம் மூலம் பல்வேறு முதலீடு திட்டங்களில் பணம் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்து செய்வதறியாமல் திகைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மற்றும் மதுரையில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து 8-க்கும் மேற்பட்ட கிளைகளில் பணத்தை இழந்த பொதுமக்கள் புகார் அளித்தனர்.
மாதாமாதம் 500 முதல் 10 ஆயிரம் வரை பல்வேறு திட்டத்தின் கீழ் பணத்தை செலுத்தி முதிர்வுத் தொகையை நகைகளாக பெற காத்திருந்த பலரையும் ஏமாற்றியதாகவும், லட்சக்கணக்கான ரூபாய் நகை பாண்டு பத்திரங்கள் போடப்பட்டு மாதம் வட்டி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாகவும், பழைய நகைகளை புதிய நகைகளாக செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி இல்லாமல் மாற்றி தருவதாக கூறியும் நூற்றுக்கணக்கான பேரிடம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
பொருளாதார குற்றப்பிரிவு சோதனையில் 100 சவரன் நகைகளும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 11 கிளைகளில் பெரும்பாலான இடங்களில் போலி நகைகள் மற்றும் கவரிங் நகைகளை வைத்து மக்களை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரணவ் ஜூவல்லரியில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களிடமிருந்து புகார்கள் பெறுவதற்கு தனியாக புகார் மேளா ஒன்று நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மக்களிடம் வாங்கிய நகைகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு தீவிர விசாரணையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.