lookback2023 - உலகளவில் கவனம் ஈர்த்த சம்பவங்கள்...!
உலகளவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
2023 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், உலகளவில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நாட்டு மக்கள் போராட்டம்
இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றியமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 7-ம் தேதி முதல் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுசீரமைப்பு மசோதாக்கள், நீதித்துறையை நலிவடையச் செய்வதாக கூறிய மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகுமாறு வலியுறுத்தினர். டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது.நேபாள விமான விபத்து
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கடந்த ஜனவரி 15-ம் தேதி பொக்காரா நோக்கி சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 இந்தியர்கள் உட்பட 72 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 கருப்புப் பெட்டிகளை அந்நாட்டு ராணுவம் ஆய்வு செய்தது.பாகிஸ்தானில் கடுமையான உணவுப் பஞ்சம்
பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் காரணமாக பாகிஸ்தானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. செப்டம்பர் மாத நிலவரப்படி பணவீக்கம் 27 சதவீதமாக அதிகரித்ததால் உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. மக்கள் உணவுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிலை உருவானது. இதனிடையே பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டதாகவும் ஒன்பதரை கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி அதிருப்தி தெரிவித்தது.துருக்கி, சிரியா நிலநடுக்கம்
துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து சிரியாவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த 2 அதிபயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனிடையே இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட 2 நாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின.சூடானில் உள்நாட்டு போர்
சூடானில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே ஏப்ரல் 15-ம் தேதி மோதல் வெடித்ததால் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இந்த போரில் 6 மாதத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், சூடானில் இருந்து 50 லட்சம் பேர் இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருவதாக செப்டம்பர் மாதம் ஐநா தெரிவித்தது. தற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்து சூடானில் அமைதி நிலவுவதாக கூறப்படுகிறது.ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது
ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியதாக ஆகஸ்ட் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்-3 ஏவப்பட்டதை தொடர்ந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய லூனா-25 விண்கலத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி ரஷ்யா ஏவியது. ஆகஸ்ட் 21-ம் தேதி தரையிறக்க திட்டமிட்டிருந்த நிலையில், விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டப் பாதையை குறைத்தபோது, அதன் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு நிலவில் மோதி நொறுங்கியது.லிபியாவில் டேனியல் புயல்
லிபியா நாட்டில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட டேனியல் புயலால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக கிழக்கு லிபியா பகுதியில் உள்ள டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 அணைகள் உடைந்தன. இதனால் டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நாட்டையே உலுக்கிய இந்த வெள்ளத்தில் சிக்கி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பல லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர்.சிங்கப்பூர் அதிபராக பதவியேற்ற தர்மன் சண்முகரத்தினம்
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அந்நாட்டின் 9-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இலங்கையை பூர்விகமாகக் கொண்ட அவர், சிங்கப்பூரில் எம்.பி, கல்வி அமைச்சர், நிதி அமைச்சர், துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்த தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் மக்கள் தனக்கு அளித்திருக்கும் ஆதரவுக்கு மதிப்பளித்து காப்பாற்றுவேன் எனக் கூறினார்.ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் அக்டோபர் 7-ம் தேதி முதல் 6.3, 5.5, 5.9, 6.2 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1,500-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்து 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஹெராத் பகுதியில் 20 கிராமங்கள் முழுமையாக சேதமடைந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் ஏராளமான முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் குழு இடையிலான போர் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போரில் பாலஸ்தீனத்தின் காசாவில் மட்டும் இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனிடையே போரை நிறுத்துமாறு பல்வேறு நாடுகளும் வலியுறுத்திய நிலையில், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதற்கான போர் இறுதி வரை தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மாற்றத்தை கொண்டு வந்த AI
ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்ட ‘CHAT GPT’ AI மாடல் 2023-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. பல்வேறு துறைகளில் வேலையிழப்பை ஏற்படுத்திய இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டும் வெளியிடப்பட்டது. மேலும், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை தயார் செய்ய AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. வரும் நாட்களில் இந்த தொழில்நுட்பம் மூலம் மனித குலத்திற்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.