“தமிழ்நாடு போராடுவதை பாருங்கள்...மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” - எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே பேச்சு!
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் குடி பத்வா பேரணி மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நேற்று(மார்ச்.31) நடைபெற்றறு. இதில் அக்கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில், மராத்தி மதிக்கப்பட வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கும்போது தமிழ்நாடு அதன் பெருமைக்காக எப்படி போராடுகிறது என்பதைப் பாருங்கள் அதேபோல்தான் கேரளாவும். மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள். மும்பையில் இருந்து கொண்டே மராத்தி பேச மறுக்கிறார்கள்.
நாளை முதல், ஒவ்வொரு வங்கியையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் சரிபார்க்கவும். மராத்தி பயன்படுத்தப்படுகிறதா என்று சரிபார்க்கவும். நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும், மகாராஷ்டிர மக்கள் சாதி அடிப்படையில் பிளவுபடுவதை நிறுத்த வேண்டும். மாநில ஆட்சியாளர்கள் உண்மையான பிரச்சினைகளை புறக்கணிக்க வேண்டுமென்றே மக்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்துகிறார்கள்.
மகாராஷ்டிராவின் இளைஞர்கள் முதலில் வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதை நிறுத்த வேண்டும். அது உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கிறது. ஏன் எல்லாருக்கும் திடீரென ஔரங்கசீப் ஞாபகம் வருகிறது? படம் பார்த்து விழித்தெழுந்த இந்துவால் எந்தப் பயனும் இல்லை. வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிக்க முடியாது, புத்தகங்களைப் படிக்க வேண்டும்”
இவ்வாறு நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.