“வாழ்க இந்தியா - இத்தாலி நட்பு!” - பிரதமர் நரேந்திர மோடி!
ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்த செல்பி வீடியோ சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி, இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்ற 50-வது ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். பதவியேற்றபின், முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.
மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி செல்பி வீடியோ எடுத்துக் கொண்டார். அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜார்ஜியா மெலோனி. அதில் மெலோடி டீமிடம் இருந்து ஹலோ’ (Hello from the Melodi team) என்று மெலோ கூற, அருகில் நிற்கும் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ந்துள்ளார். ஜார்ஜியா மெலோனி ஷேர் செய்துள்ள வீடியோ பெரும் வைரலான நிலையில் பிரைதமர் மோடியும், அவரது ட்வீட்டை தனது பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.
“வாழ்க இந்தியா - இத்தாலி நட்பு!” என்ற தலைப்புடன் பிரதமர் மோடி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இத்தாலி பிரதமர் மெலோனி, இந்திய பிரதமர் மோடி ஆகியோரது செல்பி ஏற்கனவே இதுபோல் வைரலாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரில் நடந்த ஐநாவின் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியுடன் ஜார்ஜியா மெலோனி செல்பி எடுத்தார்.