திமுக சார்பில் விருப்ப மனு பெறும் பணி தொடக்கம்: கனிமொழி பெயரில் 50 விருப்ப மனுக்கள்!
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுகளை பெறும் பணி இன்று தொடங்கியது.
நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த பிப். 19 ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மேலும் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப். 7 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விருப்ப மனு சமர்பிக்கும் பணி இன்று முதல் துவங்கியது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 50 பேர் கனிமொழி எம்.பி பெயரில் சமர்பித்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கனிமொழி பெயரில் விருப்ப மனுவை சமர்பித்துள்ளனர்.
மேலும், பெரம்பலூர் தொகுதியில் இதுவரை 47 மனுக்கள் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவின் பெயரில் சமர்பிக்கப்பட்டுள்ளது.