மக்களவைத் தேர்தல் - ஏழாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தியா முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைகிறது.
7 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசமென மொத்தம் 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய தேர்தலில் வாக்களிக்க 5.24 கோடி ஆண்கள், 4.82 கோடி பெண்கள், 3,574 மூன்றாம் பாலினத்தவர் எனமொத்தம் 10.06 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 11 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் இறுதிகட்டமாக 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் ஜுன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காலை நேரத்திலேயே மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.