மக்களவை தேர்தல் - 3 மாநிலங்களில் மட்டும் ஏழு நாட்கள் தேர்தல் நடைபெறுகிறது! எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஏழு நாட்கள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை அறிவித்தார். இதில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன.
இதையும் படியுங்கள் : சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
இதில் அதிகபட்சமாக 3 மாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, 40 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்துக்கும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களை அடுத்து அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறு உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், பாஜக மற்றும் I.N.D.I.A. கூட்டணி ஆகிய கட்சிகளிடையே தீவர போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.