தமிழ்நாட்டில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் தெரியுமா?
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான INDIA கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் பின்வருமாறு.
1. மாணிக்கம் தாகூர் - விருதுநகர்
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனை (தேமுதிக) 4,633 என்ற குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2. ஆ. மணி - தருமபுரி
தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட ஆ.மணி (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட சௌமியா அன்புமணியை (பாமக) 21,300 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
3. மாதேஸ்வரன் - நாமக்கல்
நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட மாதேஸ்வரன் (கொ.ம.தே.க) தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்மணி (அதிமுக) 28,187 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
4. மலையரசன் - கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட மலையரசன் (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட குமரகுருவை (அதிமுக) 53,784 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
5. டி.எம்.செல்வகணபதி - சேலம்
சேலம் தொகுதியில் போட்டியிட்ட டி.எம்.செல்வகணபதி (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட விக்னேஷை (அதிமுக) 67,371 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.