மக்களவைத் தேர்தல் 2024| சூரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!
குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் மே 7-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
கடந்த 12-ந் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், 19-ந் தேதி நிறைவடைந்தது. மேலும், மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 20-ந் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவும், காங்கிரஸ் மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. முன்மொழிவோரின் கையெழுத்துகள் போலியானவை என்று கூறி தேர்தல் அதிகாரி அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து பாஜக சார்பில் முகேஷ் தலால் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்த பரபரப்பான சூழலில், சூரத் தொகுதியில் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அப்போது, பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்த அனைத்து சுயேட்சைகளும் திடீரென மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதையும் படியுங்கள் : “2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி” – நடிகர் விஷால் பேட்டி!
இதையடுத்து, சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நடப்பு மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாஜக எம்பி என்ற பெருமையை முகேஷ் தலால் பெற்றார். மேலும் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.