மக்களவை தேர்தல் | மதிமுக, சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை...!
மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக திமுக குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தொகுதிப்பங்கீடு, கூட்டணி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள திமுக, காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தித்தனர். திருப்பூர் எம்.பி. சுப்பராயன், முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி, அக்கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பராயன், இணக்கமான முறையில் ஆலோசனை தொடங்கியுள்ளதாக கூறினார். சுப்பராயன் இப்படி கூறினாலும், ஒரு மாநிலங்களவை பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகள் வழங்கப்பட்டன.
இந்தமுறை 4 விருப்ப தொகுதிகளை வழங்கி இரு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் திமுக தரப்பில் இம்முறை ஒரு மக்களவை தொகுதியையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் தர முன்வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த தேர்தலை விட வரும் தேர்தலில், அதிக இடங்களில் திமுக போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று காலை மதிமுகவுடன், திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதற்காக விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 தொகுதிகளின் பட்டியலை மதிமுக தயாரித்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதிமுகவைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. தொகுதிப்பங்கீடு குழு பேச்சுவார்த்தைகளை முடித்து இறுதி செய்த உடன், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்க திமுக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.