மக்களவை தேர்தல் 2024 : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வாக்களிக்க 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், பிற மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் காவலர்கள் உட்பட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இது தவிர தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 17 ஆயிரம் துணை ராணுவப் படைவீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் 12 , உத்தரப் பிரதேசத்தில் 8, மத்தியப் பிரதேசத்தில் 6, அசாம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 5, பீகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயாவில் தலா 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் & நிகோபார், ஜம்மு & காஷ்மீர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் தலா 1 தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள் : பஞ்சாப் அணிக்கு 193 ரன்களை இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 102 மக்களவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.