Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!

12:16 PM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

முழு பேட்டி  பின்வருமாறு:

கேள்வி 1:  சமூகநீதிக் கூட்டமைப்பு எனத் தொடங்கியது முதல்,  இந்த இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள் தான்.  இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்:  ஆமாம்! எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.  மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே பிரிந்து இருப்பதால்தான் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது.  தமிழ்நாட்டில் இதனை ஒருமுகப்படுத்தியதைப் போல இந்தியா முழுமைக்கும் ஒருமுகப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன்.

பா.ஜ.க.வை எதிர்க்கும் சில கட்சிகளுக்குக் காங்கிரசுடன் சேர்வதில் நெருடல் இருந்தது. மாநில அளவிலான பிரச்சினைகள் தான் அவை.  எனவே அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு அகில இந்திய அளவில் ஒற்றைச் சிந்தனையுடன் ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்பதை ஒன்றரை ஆண்டுகளாக நான் சொல்லி வந்தேன்.  மூன்றாவது அணி சாத்தியமில்லை,  பா.ஜ.க.வை வீழ்த்தக் காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியே சரியானது என்பதை வலியுறுத்தி வந்தேன்.

அதுதான், 'இந்தியா' கூட்டணியாக உருப்பெற்றுள்ளது.  இந்தியாவை இந்தியா கூட்டணி கைப்பற்றி ஆட்சியை அமைக்கும்போதும்,  அந்த ஆட்சி கூட்டாட்சியாக செயல்படும் போதும் எனது முயற்சி முழு வெற்றியைப் பெறும்.

கேள்வி 2:  இந்தியா கூட்டணியில் இருந்த நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. பக்கம் சாய்ந்தது,  மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துக் களம் காண்கிறது.  ஆம் ஆத்மி கட்சியும் சிக்கலில் உள்ளது. இந்தச் சூழலில் வெற்றியின் மீது நம்பிக்கை உள்ளதா?

பதில்: கூட்டணிக்கான அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழல்களுக்கேற்ப வியூகங்களை வகுத்து,  வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்திருந்தேன்.  எனவே பல்வேறு மாநிலங்களில் வலுவான அணிச்சேர்க்கை நடந்துள்ளது.

நிதிஷ்குமார் இல்லாமலேயே பீகாரில் வலுவான அணி அமைந்துள்ளது.  மம்தா பானர்ஜி அவர்களைப் பொறுத்தவரையில் அவரது வெற்றி என்பது இந்தியா கூட்டணியின் வெற்றி தான்.  ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் ஒன்றாகவே போட்டியிடுகின்றன.  நீங்கள் சொல்லும் தலைவர்கள் சில மாநிலங்களில் தனித்து நின்றாலும்,  பா.ஜ.க.வை எதிர்த்தே பரப்புரை செய்கிறார்கள்.  எனவே இது இந்தியா கூட்டணிக்கு வலிமையைத்தான் தருகிறது.

கேள்வி 3:  தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தைவிட, தேசிய அளவில் தேர்தல் நிலவரம் வேறு மாதிரியாக எப்போதுமே இருக்கும்.  இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

பதில்:  அப்படிச் சொல்ல முடியாது. 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற முழக்கத்துடன் மீண்டும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான் அமையும் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகின.  தேர்தல் முடிவுகளில் தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இந்தியா முழுமைக்கும் மகத்தான வெற்றி பெற்று,  ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  அதுபோல இப்போதும் நடக்கலாம்.  மோடி எதிர்ப்புச் சிந்தனை என்பது தென் மாநிலங்களைப் போலவே இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் விதைக்கப்பட்டு விட்டது.  கொரோனா காலத்தில் மக்களைக் கைவிட்டதும்,  பல நூறு கிலோ மீட்டர் தூரம் பஸ் இல்லாமல் மக்கள் நடந்து போனதும்,  பணமதிப்பிழப்பின் போது மக்கள் அடைந்த துன்பமும்,  உழவர்கள் இரண்டு ஆண்டுகளாகப் போராடுவதும், மணிப்பூர் கலவரங்களும், பிரச்சினையும்,  உ.பி.யில் பட்டியலின தாக்கப்படுவதும், அரவிந்த் கெஜ்ரிவால் கைதும் ஜம்மு காஷ்மீர் பழங்குடியினர் வட மாநில மக்கள் மனதில் மோடி மீதான கோபத்தை அதிகப்படுத்தி வருகிறது.  எனவே, இங்கு மாதிரியேதான் அங்கும் ரிசல்ட் இருக்கும்: கவலைப்பட வேண்டாம்.

கேள்வி 4:  தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் விடுதலைச் சிறுத்தைகள்,  மதிமுக கட்சிகளுக்கு விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்க முடியாததன் காரணம் என்ன?

பதில்: விரும்பிய எண்ணிக்கையைக் அவர்கள் விருப்பமுடன் ஒப்பந்தத்தில் கொடுத்ததால் தான் கையெழுத்துப் போட்டுள்ளார்கள்.  எனவே, விரும்பிய தொகுதியை வழங்க முடியவில்லை என்பதே தவறானதாகும்.

கேள்வி 5:   காங்கிரஸ், சி.பி.எம். மற்றும் ம.தி.மு.க.வுக்கு இந்த முறை தொகுதிகளை மாற்றியதற்கு சிறப்புக் காரணம் உள்ளதா?

பதில்: தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளும்தான் மாறி இருக்கின்றன. தோழமைக் கட்சிகளுக்கும் அவர்கள் கேட்ட தொகுதிகள்,  அவர்களுக்கு விருப்பமான தொகுதிகள்தான் தரப்பட்டுள்ளன.

கேள்வி 6:  எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த தேர்தலில் வெளியிட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு,  பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவற்றை நீங்கள் செய்யவில்லை என தொடர்ந்து பிரச்சாரத்தின்போது குற்றம் சாட்டி வருகிறாரே? அவருக்கு உங்கள் பதில் என்ன?

பதில்: இவையெல்லாம் ஒன்றிய அளவில் ஆட்சியில் இருப்பவர்கள் ஆண்டுகளாக செய்ய வேண்டியதாகும்.  கடந்த ஐந்து நாங்களா ஆட்சியில் பழனிசாமியின் கூட்டணி ஆட்சி தானே இருந்தது?

நீட் தேர்வை ரத்து செய்ய அவர் பா.ஜ.க. ஆட்சி மூலமாக என்ன செய்தார்? எதுவும் செய்யவில்லை.  நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக்கூட வெளியில் சொல்லாமல் மறைத்தவர்தான் பழனிசாமி.  அவருக்கு இது போல கேட்கும் உரிமை இல்லை.  நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் என்பதையாவது பழனிசாமி அறிவாரா?

கேள்வி 7:  டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில்,  சிறையில் இருந்தே ஆட்சி நடத்துவதாக கூறி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியல் சட்ட அமைப்பின் மாண்பினையும் சிதைக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவர்கள் சிறையிலிருந்தபடியே நடத்துகின்ற மாநில உரிமைக்கான போராட்டத்தை மதிக்கிறேன். நீதி அவர் பக்கம் நிற்கும் என நம்புகிறேன்.

கேள்வி 8:  கடந்த 2019 தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வென்றது.  நீங்கள் எதிர்த்து விமர்சித்த கட்சிதான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளது.  வெற்றி பெற்ற 39 எம்பிக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது?  மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்?

பதில்: மீண்டும் அதே நிலை உருவாகாது. 'இந்தியா' கூட்டணி ஆட்சி அமையும்.  எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளைச் செயல்படுத்திக் காட்டுவோம்.  கடந்த ஐந்தாண்டு காலத்தில் பா.ஜ.க.வுக்கு மிகச் சரியான எதிர்க்கட்சியாகத் தி.மு.க. செயல்பட்டுள்ளது.  மோடி அரசின் சர்வாதிகாரச் சட்டங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்துள்ளோம்.  எதேச்சாதிகாரச் செயல்கள் அனைத்தையும் மிகக் கடுமையாக அம்பலப்படுத்தி இருக்கிறோம்.  மாநில உரிமைகளுக்காக உரக்க ஒலித்துள்ளோம்.

ஒற்றைச் சர்வாதிகார நாடாக ஆக்க நினைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்துள்ளோம்.  இதே சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டிப் போராடி இருக்கிறோம்.  அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சமூக பொருளாதார ரீதியாக பா.ஜ.க.வின் அவலங்களை எதிர்பார்க்கவில்லை.  விமர்சித்துள்ளோம்.  அதனால்தான் இதனை பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் எங்களைக் கடுமையாக பிரதமரும்,  உள்துறை அமைச்சரும்,  நிதி அமைச்சரும் தொடர்ந்து விமர்சித்துப் பேசினார்கள்.

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கும் காவல் வீரர்களாகத் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரே ஒருவர் தவிர அனைவரும் செயல்பட்டுள்ளார்கள்.  இது இந்தியாவுக்கு தி.மு.க. செய்த மாபெரும் தொண்டாகும்.  திமுக உறுப்பினர்களின் சிந்தனையால்தான் 'இந்தியா' கூட்டணியாக உருவாகி உள்ளது.

கேள்வி 9:  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளப்படாத வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான 3 சாதனைகள் என்று எதைப் பெருமையாக கூறுவீர்கள்?

பதில்: 

  1. பேருந்துகளில் மகளிருக்கான விடியல் பயணம் திட்டம்,
  2. மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,
  3. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.

இந்த மூன்றும் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றுகின்ற திராவிட மாடல் அரசின் முத்தான மூன்று சாதனைத் திட்டங்கள்.  இத்துடன் சாதனைகள் நிறைவடைந்துவிடவில்லை.  நான் முதல்வன்,  புதுமைப் பெண்,  தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம்,  இல்லம் தேடிக் கல்வி,  இன்னுயிர் காப்போம்,  முதல்வரின் முகவரி,  முதலீட்டாளர்களின் முதல் முகவரி எனக் கல்வி - மருத்துவம் தொழில் கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சாதனைத் திட்டங்கள் நிறைய உள்ளன.

கேள்வி 10:  இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்குச் சாதகமாக இருப்பதாக வெளியாகும் நிலையில்,  வெற்றி வசமானால் உங்களிடம் இருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?.

பதில்: வெற்றியை மக்கள் எங்களுக்கு முழுமையாக வழங்குவார்கள். நாங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்.

கேள்வி 11:  தி.மு.க. மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு பிரதமர் மோடியால் வைக்கப்படுகிறது. தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரிய பதவிகளுக்கு வரமுடியும் என்ற அவரது குற்றச்சாட்டுக்கு தங்களின் பதில் என்ன?

பதில்:  கேட்டுக் கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டு இது.  வேறு ஏதும் இருந்தால் சொல்லச் சொல்லவும்.  நாங்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளோம்.  ஊர் சுற்றுவதற்காக அல்ல என்று சொல்லி இருக்கிறேன்.  கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்கான கட்சிதான் தி.மு.க. பா.ஜ.க.விலும் நிறைய வாரிசுகள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.  அவர்கள் யாரையாவது பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லையா? அதை அவர் நேரடியாக அவருக்குச் சொல்ல முடியாமல் இப்படி தி.மு.க.வுக்கு சொல்வதைப் போலச் சொல்கிறாரா?

கேள்வி 12:  தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செய்கின்றனர். இதை மாற்ற என்ன முயற்சி எடுப்பீர்கள்?

பதில்:  ஆளுநர் என்பது நியமனப் பதவியே தவிர. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பதவி கிடையாது.  ஆளுநர்கள் மூலமாக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அத்துமீறுவதும்,  போட்டி அரசாங்கம் நடத்த நினைப்பதும் அரசியல்சட்டத்தை மீறுகின்ற செயலாகும்.

அதனால் தான்,  ஆளுநர் என்கிற நியமனப் பதவியே தேவையில்லை என்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தலைவர் கலைஞர் காலத்திலும் தற்போதும் தி.மு.க.வின் நிலைப்பாடு.  ஆனால், நடைமுறையில் ஆளுநர் பதவி நீடித்துவரும் நிலையில், ஆளுநர்களை நியமிக்கும்போது மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெற்று நியமித்திடப் புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தி.மு.க.வின் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் அதுமட்டுமல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில்,  மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு,  ஆளுநர் சட்டநடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.  அது நிறைவேற்றும்போது ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

கேள்வி 13:  தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகள் தவிர வேறுகட்சிகள் காலூன்றிவிடக் கூடாது என அ.தி.மு.க.வின் பழனிசாமியுடன் நீங்கள் கைகோத்துச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே?

பதில்: பழனிசாமியின் கட்சியை நாங்கள் திராவிடக் கட்சியாக நினைப்பது இல்லை. அவர்களுக்கும் திராவிடக் கொள்கைக்கும் தொடர்பு இல்லை.  பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர்களுக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை.  இந்தக் கொள்கைக்கு எதிராகக் கட்சி நடத்துவது தான் அந்தக் கூட்டம்.  எனவே, அவர்களோடு கை கோத்துள்ளோம் என்பது மிகத் தவறான குற்றச்சாட்டு!

தமிழ்நாடு என்பது பெரியார் மண்! சமூகநீதி மண்! தமிழன் என்ற இன உணர்வோடு மக்கள் ஒற்றுமையாக வாழும் மண்! இங்கு மக்களைப் பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது.  இதனை பா.ஜ.க. முதலில் உணரவேண்டும். என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியவில்லையே என்ற வேதனையோடு இந்த அவதூறு கிளப்பப்படுகிறது. பருத்தி விளையும் மண்ணில் பேரிக்காய் விளையாது என்பதை பா.ஜ.க. முதலில் உணர்ந்து திருந்த வேண்டும்.

கேள்வி 14:  நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக மட்டுமே இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்தக் கோரிக்கை நிறைவேறுவது சாத்தியமா?

பதில்:  நீட் தேர்வால் மருத்துவ மாணவர்களின் கல்விக் கனவு சிதைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்குவோம்.  பயிற்சி மையங்கள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் பயன்படுகிறது.  இதுதான் உண்மை.
நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த மருத்துவக் அதிலிருந்து கட்டமைப்பையும் சிதைக்கிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கக் கோரி சட்டமுன்வடிவு இயற்றப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.  அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கவனிக்கும் மற்ற மாநிலங்களும் இதிலிருந்து விலக்குப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்.

கேள்வி 15:  தமிழ்நாட்டில் தி.மு.க. vs பா.ஜ.க. என்பது போன்ற தோற்றம் தற்போதைய தேர்தல் களத்தில் தெரிகிறது. இதனால் பா.ஜ.க. இங்கு மேலும் வளரத்தானே செய்யும்?

பதில்: இது உண்மையல்ல. ஊடகங்களின் மூலமாக ஊதிப் பெருக்கப்படுகிறது. பிரதமர் அடிக்கடி வருவதால் அப்படித் தெரிகிறது.

கேள்வி 16:  பா.ஜ.க. மட்டுமே இம்முறை 370 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி பேசி வரும் நிலையில்,  இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நாடு முழுவதும் குறைந்தபட்சம் இத்தனை இடங்களில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?

பதில்: பிரதமர் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு இடங்கள் கிடைக்காது என்பதும்,  இந்திய ஒன்றியத்தை இந்தியா கூட்டணி ஆள்கின்ற அளவிற்கு வலிமையான வெற்றி கிடைக்கும் என்பதுமே உண்மை.

கேள்வி 17:  பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறதே... 

பதில்: சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என உத்தரவாதம் ஆசிரியர்கள் அளித்திருக்கிறேன்.  அரசு ஊழியர்கள், ஆட்சி சக்கரத்தை இயக்கக்கூடியவர்கள்.  அவர்கள் இந்த அரசு எந்தளவு நிதி நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறது என்பதை அறிவார்கள்.

மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த நிதி நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டதன் விளைவாக மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுபோல,  நிதி நெருக்கடி இன்னும் சீராகும் போது மற்ற வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஒன்றிய அரசிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உரிய வகையில் கிடைக்கின்ற காலம் கனிய இருப்பதால் அரசு ஊழியர்கள் காலம் கனியும்! ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேறும்

கேள்வி 18:  இந்த முறை மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே. அதற்கு முக்கியக் காரணம் உள்ளதா? சில குறிப்பிட்ட சமூகத்துக்கு இடம் தரவில்லை என்கிறார்களே?

பதில்: அனுபவம் கொண்ட மூத்தவர்களும், அறிமுகமாகும் இளைஞர்களும் இணைந்த வேட்பாளர் பட்டியலைத் தி.மு.கழகம் வெளியிட்டுள்ளது.  அதுபோல அனைத்துச் சமுதாயத்தினருக்குமான பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால்,  உங்கள் கேள்விக்கே இடமிருக்காது. சில தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு,  அவர்கள் அங்குள்ள சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கும் சூழலும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.

கேள்வி 19:  தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, நாங்கள் ஜெயித்து வந்தால் தி.மு.க.வே இருக்காது என்று கூறியுள்ளாரே. 3-ஆவது முறை பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது.  ஆனால்,  நிச்சயமாக அப்படியொரு நிலைமை இருக்காது.  அதைத் தேர்தல் முடிவுகள் காட்டும்.

கேள்வி 20:  உதயசூரியன் சின்னத்தில் உயிரே போனாலும் நிற்கமாட்டேன் என்று துரை வைகோ பேசியுள்ளார்.  தி.மு.க. சார்பில் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதா?

பதில்: தனிச்சின்னத்தில் நிற்பதாகவே தொகுதிப் பங்கீட்டின் போதும் ம.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது.  'தீப்பெட்டி' சின்னத்தில் துரை வைகோ நிற்கிறார்.  எனவே, தி.மு.க. எந்த அழுத்தமும் தரவில்லை என்பதை நீங்கள் அறியலாம்.

Tags :
BJPDMKElection2024katchatheevuMK StalinPM Modi
Advertisement
Next Article