மக்களவைத் தேர்தல் 2024 - தேனி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேனி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீட்டை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நிறைவு செய்துள்ளன.
அந்த வகையில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது.
இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது. மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” தேனி தொகுதி திமுக வேட்பாளர் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற வைத்தால் மாதம் 2நாள் தேனியில் தங்கி மக்களுக்கு சேவையற்ற உள்ளேன். பத்து ஆண்டுகாலம் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தாரா? தமிழகத்துக்கு என்ன செய்தார்?
மொழி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. தற்போது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை தந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளது. தமிழ்நாட்டின் மாணவர்கள் படிக்கக் கூடாது என்பதற்காக புதிய கல்விக் கொள்கைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வரவில்லை, நீட் தேர்வின் மூலமாக 21 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணம் மத்திய பாரதிய ஜனதா அரசும் அதற்கு துணை நின்ற அதிமுக அரசும் தான். ஒன்பது ஆண்டுகால பாரதிய ஜனதா அரசு 7 1/2 லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டவில்லை.
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியிலும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்படும். 40 தொகுதியிலும் வெற்றி பெற்று கலைஞருக்கு பிறந்தநாள் பரிசு அளிக்க வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.