For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தாக்குதல் விவகாரம்: கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் கைது!

03:16 PM Dec 21, 2023 IST | Web Editor
மக்களவை தாக்குதல் விவகாரம்  கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் கைது
Advertisement

மக்களவையில் அத்துமீறி நுழைந்து புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisement

கடந்த டிச. 13-ம் தேதி மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் அவைக்குள் திடீரென குதித்து, வண்ணப் புகைக் குப்பிகளை வீசி, நாட்டில் ‘சர்வாதிகாரம் நடைபெறக் கூடாது’ என்று முழக்கங்களை எழுப்பினர். அவர்களை அவையில் இருந்த எம்.பி.க்கள் சிறைப்பிடித்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

அதே வேளையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவர், புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், இந்த நிகழ்வுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லலித் ஜா, அவருக்கு உதவியதாக மகேஷ் குமாவத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் குறித்து காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது, கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிந்தனைகள் குறித்து தொடர்ந்து விவாதித்து, அதுதொடர்பான காணொலிகளை சமூக ஊடகத்தில் வெளியிட்டு வந்துள்ளனர். அவர்களின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளைக் கண்டபோது, அவர்கள் புரட்சிகர தலைவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

எனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்தில் (அப்போது மத்திய சட்டப்பேரவை) புரட்சியாளா் பகத் சிங் செய்தது போல மீண்டும் செய்ய 6 பேரும் திட்டமிட்டனர். இதையடுத்து மக்களவையில் புகையை உமிழும் குப்பிகள் வீசப்பட்டன. புரட்சியாளர்கள் பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரின் பெயர் கொண்ட 6 வாட்ஸ்-ஆப் குழுக்களில் 6 பேரும் இருந்துள்ளனர். இந்தக் குழுக்களில் இடம்பெற்றவர்கள், அவா்களின் உரையாடல் விவரங்கள் வாட்ஸ்-ஆப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளன.

ஆனால் இவர்கள் அனைவரும் ‘சிக்னல்’ செயலியையும் பயன்படுத்தியுள்ளனர். அவர்களில் 5 பேரின் பயணத்துக்கு மனோரஞ்சன் செலவழித்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். சாகர் சர்மா, மனோரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய 4 பேரின் கைப்பேசிகளை லலித் மற்றும் மகேஷ் எரித்து ஆதாரத்தை அழித்ததாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அந்த 4 பேரும் பயன்படுத்திய சிம் காா்டுகளின் பிரதிகளை பெற காவல் துறை முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட மனோரஞ்சனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மென்பொறியாளர் சாய் கிருஷ்ணன் என்பவர் இன்று (டிச. 21) கைது செய்யப்பட்டுள்ளார். மனோரஞ்சனும் சாய் கிருஷ்ணனும் ஒன்றாக பொறியியல் படித்ததாகவும், இருவரும் தொடர்ந்து நட்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

Tags :
Advertisement