கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழ் நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷாஜஹான், கேரளத்தில் டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதன் படி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 9 ஆம் தேதியும் திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 11 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், நவம்பர் 21 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யவும் எனவும் வேட்புமனு மீதான பரிசீலனை நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவ. 24 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை டிச. 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் 17,337 வார்டுகள், தொகுதி பஞ்சாயத்துகளில் 2,267 வார்டுகள், 346 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 3,205 நகராட்சி வார்டுகள் மற்றும் 421 மாநகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த உள்ளாட்சி தேர்தலானது அடுத்த ஆண்டு கேரளாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. ஆகவே ஆளும் சிபிஐ(எம்),காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் வெற்றியை குவிக்கும் நோக்கில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.