நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்...
இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவுகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.....
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2-வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 67-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலச்சரிவில் 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகளின் பட்டியல்:
- கவுஹாத்தி - அசாம்: கனமழை காரணமாக 1948 செப்டம்பர் 18 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நிலச்சரிவால் ஒரு கிராமம் முழுவதும் புதையுண்டது.
- டார்ஜிலிங் - மேற்கு வங்கம்: அக்டோபர் 4, 1968 இல் ஏற்பட்டது. 60 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலை 91 பகுதிகளாக சிதைந்தது. நிலச்சரிவில் 1000க்கும் மேற்ப்படோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மல்பா - உத்தரகாண்ட்: 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை மல்பா கிராமத்தில் தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் 380 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- மும்பை - மகாராஷ்டிரா: ஜூலை 2000 இல் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 67 பேர் உயிரிழந்ததாகவும், உள்ளூர் ரயில்கள் தடம்புரண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அம்பூரி - கேரளா: இந்த நிலச்சரிவு கேரளாவின் வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு என்று அறியப்படுகிறது. கனமழை காரணமாக நவம்பர் 9, 2001 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 40 பேர் இறந்தனர். உயிரிழப்புகள் குறைவு என்றாலும் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தன.
- கேதார்நாத் - உத்தரகாண்ட்: ஜூன் 16, 2013 அன்று உத்தரகாண்ட் வெள்ளத்தின் விளைவாக ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்கு பிந்தைய நிலச்சரிவில் 5700- க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் 4,200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக மோசமான நிலச்சரிவாக கேதார்நாத் சம்பவம் பார்க்கப்படுகிறது.
- மாலின் - மகாராஷ்டிரா: ஜூலை 30, 2014 அன்று மாலினில் உள்ள ஒரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. பேரழிவின் பின்னர் சுமார் 151 பேர் இறந்தனர் மற்றும் 100 பேர் காணாமல் போயினர்.