2 வயது குழந்தைக்கு #LinkedIn கணக்கு! பேசுபொருளான Network Is Networth!
2 வயது குழந்தைக்கு LinkedIn தளத்தில் கணக்கு துவங்கியிருப்பது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் பயன்பாடு என்பது அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்று காலத்திலிருந்துதான் இந்த சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. சிலர் இவற்றின் மூலம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினாலும், பலர் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றனர்.
சாதாரணமாக 13 வயது நிறைவடைந்த பின்னரே சமூக வலைத்தளங்களில் கணக்கு வைக்க முடியும். ஆனால் தற்போது போலி விவரங்கள் மூலம் குழந்தைகள் கணக்கு வைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் 2 வயது குழந்தைக்கு LinkedIn தளத்தில் கணக்கு துவங்கப்பட்டிருப்பது அனைவரிடத்திலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது 2 வயது மகனுக்கு LinkedIn-ல் ஒரு கணக்கை துவங்கியுள்ளார். சுயவிவரத்தில் வைக்கப்பட்டுள்ள Network Is Networth என்ற வாசகம் சமூக வலைத்தளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்துள்ளது, சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுயவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இன்றுடன் எனக்கு 2 வயதாகிறது. முன்னரே இந்த உலகத்தின் அழுத்தத்தை உணர ஆரம்பித்துவிட்டேன். தற்போது என் வீட்டில் பெரும் பேசுபொருளாக இருப்பது என்னை ‘பள்ளியில் சேர்ப்பது’. உண்மையில் இது மிகப்பெரிய சோகம். எனது தந்தையின் நண்பர் எப்போதும் கூறுவது Network Is Networth. அதனால்தான் நான் இங்கு இருக்கிறேன். வலைத்தளம் எனக்கான நல்லப் பள்ளியை தேர்ந்தெடுக்க உதவும். நான் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி இருக்கவே நினைக்கிறேன். ஆனால், என்னுடைய எதிர்காலத்திற்காக வாரத்திற்கு ஒருமுறை மட்டும் லாக்இன் செய்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நகைச்சுவையான முறையில் அமைந்துள்ள இந்த சுயவிவரமும் அதன் உள்ளடக்கமும் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. பெரும்பாலானோர் 2 வயதுக்கு குழந்தைக்கு சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதை விமர்சித்தே வருகின்றனர்.
LinkedIn தளத்தில் கணக்கு வைக்க வயது வரம்பு என்ன?
ஒரு கணக்கை தொடங்க பயனர்கள் குறைந்தபட்சம் 16 வயது நிரம்பியிருக்க வேண்டும் என LinkedIn விதிமுறைகள் கூறுகிறது.