உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்த சென்னை இளைஞரை காப்பாற்றிய இன்டர்போல்! கடல் கடந்து உயிரை காத்த மனிதநேயம்!
அமெரிக்க இன்டர்போல் கொடுத்த தகவல் மூலம் சென்னை இளைஞரின் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தை தடுத்துள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ்.
உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணங்கள் ஏற்படும் போது உதவுவதற்காக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட வெட்டிரான் கிரைசிஸ் லைன் VCL எனப்படும் அமைப்பிற்கு சென்னை இளைஞர் ஆன்லைன் சேட் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தன் வாழ்க்கையை எளிதாகவும் விரைவாகவும் முடித்துக் கொள்ள பரிந்துரை செய்யுமாறும், நீங்கள் கூறுவது சரியானதாக இருந்தால் அதை செய்ய தயங்க மாட்டேன் என்னுடைய நிலைமையை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் எனவும் குறுஞ்செய்தி மூலம் கேட்டுள்ளார். ஆனால் அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற தகவல் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில் உடனடியாக அந்த அமைப்பு அமெரிக்காவின் நேஷனல் சென்ட்ரல் பீரோ இன்டர்போல் மூலமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணையை உடனடியாக தொடங்கினர். ஐபி முகவரி மூலமாகவும் அவர் பயன்படுத்திய இணையதள சேவை நிறுவன உதவியுடனும் அந்த இளைஞர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் உடனடியாக இளைஞரை பிடித்த சென்னை போலீசார், மனநல ஆலோசனை கொடுத்து உயிரை மாய்த்துக்கொள்வதற்கான எண்ணத்தை மாற்றியுள்ளனர். விசாரணை செய்ததில் அந்த இளைஞர் தலையில் முடி கொட்டும் காரணத்தினால் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு ஆளானதும், தொடர்ந்து தொப்பி அணிவதால், தலை முடி கொட்டி வழுக்கை தலையாய் இருப்பதை பார்த்து தன் சக நண்பர்கள் கேலி செய்த காரணத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளானது தெரியவந்திருக்கிறது. மேலும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள உரிய வசதி இல்லாத காரணத்தினாலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.
உரிய மன நல ஆலோசனையும் வழிகாட்டுதலும் உதவியும் சென்னை காவல்துறை அளித்ததன் அடிப்படையில், தனது சவால்களைத் தாண்டி வருவதும் தனது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் வகையிலும் இளைஞர் மாறியுள்ளார்.
அமெரிக்க சர்வதேச போலீசாருடன் இணைந்து சென்னை சைபர் க்ரைம் காவல்துறை, இளைஞர் உயிரை மாய்த்துக்கொள்வதை தடுத்துள்ளது. அமெரிக்காவில் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் தளத்தின் மூலம் சென்னையில் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்டிருந்த இளைஞரை காப்பாற்றிய சென்னை காவல்துறைக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.