மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு!
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “அசோக் நகர் மாவட்டத்தின் சடோரா பகுதியில் உள்ள பங்கரியா-சக் கிராமத்தில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 3 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சத்தர்பூரில், காடிமல்ஹ்ரா பகுதிகளில் உள்ள பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3-ஆம் வகுப்பு மாணவர் ரவீந்தர் ரைக்வார் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மகராஜ்பூர் பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.
குவாலியரில் உள்ள பிதர்வார் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் மற்றும் ஆண் உயிரிழந்தனர். மேலும் பன்னாவின் அஜய்கர் பகுதியில் 40 வயதான விவசாயி பலியானார். அங்கு வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று ஆடுகளும் மின்னல் தாக்கியதில் இறந்தன” என்றனர்.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் போபால் முன்னறிவிப்புப் பொறுப்பாளர் திவ்யா சுரேந்திரன் கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" எனவும் தெரிவித்துள்ளார்.