தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் சிறையுடன், ரூ.1 கோடி அபராதம் - எங்கு தெரியுமா?
அரசுப் பணி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது முறைகேடுக்கு உதவினாலோ ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா, உத்தரப் பிரதேச மாநிலப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அரசு தேர்வு முகமை நடத்தும் பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அரசின் மீது பல கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது முறைகேட்டுக்கு உதவினாலோ அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க வகைசெய்யும் சட்ட மசோதா, உத்தரப் பிரதேச மாநிலப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘உத்தர பிரதேச அரசுப் பணிகள் தேர்வுகள் (முறைகேடான வழிமுறைகளைத் தடுத்தல்) சட்ட மசோதா-2024’ என்ற பெயரிலான இம்மசோதாவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டுமென எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அக்கோரிக்கையை பேரவைத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
‘அரசுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது, இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயற்சிக்கும் சக்திகளை ஒடுக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. தற்போதைய மசோதா மூலம் அரசுப் பணி தேர்வு நடைமுறையில் வெளிப்படைத் தன்மையும், நம்பகத் தன்மையும் உறுதி செய்யப்படும். தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் இம்மசோதா உறுதிசெய்யும்’ அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.