பொற்கோயில் பாதுகாப்பு குறித்த லெப்டினன்ட் ஜெனரல் டி குன்ஹா கருத்து - தலைமை பூசாரி மறுப்பு!
பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு கடற்படை வீரர் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, பாகிஸ்தானும் துப்பாக்கி மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்தியா மீது நடத்தியது. இதில் எல்லை பகுதியில் நடந்த துப்பாக்கி தாக்குதலின் பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். ஆனால், பாகிஸ்தானின் ட்ரோன்களை வானில் வைத்து நம் இந்திய விமானப்படை தகர்ப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து விவரித்து வருகின்றனர்.
தொடர்ந்து அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலை ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக குறிவைக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு லெப்டினன்ட் ஜெனரல் டி'குன்ஹா அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அதில் பொற்கோயிலின் தலைமை பூசாரியிடம் முறையான ஒத்துழைப்பு பெற்று அங்கு துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக தெரிவித்தார். அத்துடன் பொற்கோயிலை நோக்கி குறி வைக்கைப்பட்ட ட்ரோன்களை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பொற்கோயிலின் தலைமை பூசாரி கியானி ரக்பீர் சிங், லெப்டினன்ட் ஜெனரல் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பொற்கோயில் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.