“பொய்களும், வாட்ஸ்-ஆப் கதைகளும் தான் பாஜகவின் உயிர்மூச்சு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
தேர்தல் நேரத்தில் வந்து பொய்களை சொன்னால், அதை நம்ப தமிழ்நாட்டு மக்கள் என்ன ஏமாளிகளா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த அவர், நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :
“மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதே இத்தனை சாதனைகளை நம்மால் செய்ய முடிகிறது என்றால், ஒத்துழைப்பு கொடுக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால் இன்னும் 10 மடங்கு சாதனைகளை திமுக செய்யும். நாட்டு மக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், ‘மோடியின் உத்தரவாதம்’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார்.
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் என்ற உங்களது உத்தரவாதத்தின் கதி என்ன? 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தின் கதி என்ன? அதை சொல்லுங்கள். அடுத்த வாரம் தமிழ்நாட்டுக்கு பிரதமர் வருவதாக செய்திகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு அவர் செய்து தந்திருக்கும் சிறப்பு திட்டங்கள் என்ன? என்று மக்கள் அவரிடம் கேட்க வேண்டும். ‘பதில் சொல்லுங்க பிரதமரே’ என்று கேட்க வேண்டும்.
ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் திரும்பிப் பார்க்காமல், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து பொய்களை சொன்னால், அதை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா? பொய்களும், வாட்ஸ்-ஆப் கதைகளும் தான் பாஜகவின் உயிர்மூச்சு. இனி இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.