விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து!
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெடி விபத்துக்களை தடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வெடி விபத்து கூட நடக்க கூடாது என்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் 10 நாட்களுக்குள் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
மேலும் இந்த ஆய்வின் போது விதிமீறல் இருந்தால் அந்த ஆலைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் முடிவெடுக்கலாம் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 14ம் தேதி முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட 15 ஆய்வு குழு மூலமாக 400 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது ஆய்வில் விதியை மீறி செயல்பட்டதாக 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வின் அறிக்கையை வரும் 27ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.