"தபால் பெட்டிக்கு விடை கொடுப்போம்!" - இந்திய அஞ்சல் துறையின் அதிரடி முடிவு!
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய மக்களின் பயன்பாட்டில் இருந்த பதிவு தபால் சேவை (Registered Post) வரும் செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இணையதளம், குறுஞ்செய்தி சேவைகள் மற்றும் மின்னஞ்சல் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் வருகையால், கடிதப் போக்குவரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக, பதிவு தபால் சேவையின் மீது மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதால், இந்த சேவையை நிறுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.
ஒரு காலத்தில் மிக முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக இருந்த பதிவு தபால், முக்கியமான ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் செய்திகளை பாதுகாப்பாக அனுப்புவதற்கு பயன்பட்டது. ஆனால், தற்போது அனைத்துமே மின்னணுமயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், கடிதப் போக்குவரத்து மெதுவானதாகக் கருதப்படுகிறது.
அஞ்சல் துறையின் இந்த முடிவுக்கு மற்றொரு முக்கிய காரணம், ஸ்பீடு போஸ்ட் (Speed Post) சேவையின் வெற்றி. பதிவு தபாலை விட மிக வேகமாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் கடிதங்களைச் சேர்ப்பிப்பதால், மக்கள் ஸ்பீடு போஸ்ட் சேவையை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர்.
எனவே, தற்போது அஞ்சல் துறை, பதிவு தபால் சேவையை நிறுத்திவிட்டு, ஸ்பீடு போஸ்ட் முறையை மட்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம், அஞ்சல் துறையின் செயல்பாடுகள் மேலும் நவீனமயமாக்கப்பட்டு, மக்களின் தேவைக்கேற்ப விரைவான சேவைகளை வழங்குவது சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.