2025ல் மீண்டும் சந்திக்கலாம்...! - ராணுவ பயிற்சியை தொடங்கிய BTS உறுப்பினர்கள்!
தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்கள் RM மற்றும் V ஆகியோர் நேற்று ராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், ஜிமின் மற்றும் ஜங்கூக் இன்று ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் BTS-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை தங்களது பாடல்களில் புகுத்தியதன் மூலம் உலகம் முழுவதும் BTS பிரபலமடைந்தனர். அவர்களில் தோற்றமும், பாடல்களும், இசையும் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றது.
தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு பணியாற்ற வேண்டும். இதில் கே-பாப் கலைஞர்களும் விதிவிலக்கல்ல. அதன்படி BTS உறுப்பினர்களும் ராணுவ பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி முன்னதாக ஜின், ஜே-ஹோப், சுகா ஆகிய மூவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராணுவ பயிற்சியை தொடங்கினர். இதனிடையே மீதமுள்ள 4 உறுப்பினர்களும் விரைவில் ராணுவ பயிற்சியை தொடங்குவார்கள் என்றும், ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பிக்ஹிட் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : “நிவாரணப் பொருட்களில் விஜய்-ன் படங்களை ஒட்ட வேண்டாம்” - மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்து வேண்டுகோள்
இந்நிலையில் நேற்று RM மற்றும் V ராணுவ பயிற்சியை தொடங்கியதாக பிக்ஹிட் நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து இன்று ஜிமின் மற்றும் ஜங்கூக் ஆகியோரும் ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் இவர்கள் அனைவரும் 2025-ல் குழுவாக தொடர உள்ளனர்.