"மருது பாண்டியர்களின் தேசப்பற்றை 224-ஆம் நினைவு நாளில் போற்றுவோம்" - அன்புமணி ராமதாஸ்!
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட மருது சகோதரர்கள் 24.10.1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். இதனால் மருது சகோதரர்களின் வீரத்தை போற்றும் வகையில் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை தமிழ்நாடு அரசு, அரசு விழாவாக கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் மருது சகோதரர்களின் 224வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "வீரத்திற்கும், விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த மருது சகோதரர்களின் 224-ஆம் நினைவு நாள் இன்று. வெள்ளையர்களுக்கு எதிராக முதல் விடுதலைப் போரை நடத்தியதுடன், அவர்களை விரட்டியடித்த பெருமை மிக்கவர்களான மருதுபாண்டியர்களின் நினைவு நாளில் அவர்களின் வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம். நாட்டைக் காப்பதில் அவர்களின் தியாகத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வோம்.
பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் 1785 முதல் 1801 வரை நம் மண்ணை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கி வீறுகொண்டு போராடினார்கள். பீரங்கி போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் போரிட வந்த வெள்ளையர்களை வேல்கம்பும், வீச்சரிவாளும் வைத்து ஓடஓட விரட்டிய பெருமை கொண்டவர்கள் மருது சகோதரர்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801ம் ஆண்டு சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். சதித்திட்டங்கள் மூலம் சிவகங்கையை சுற்றி வளைத்த ஆங்கிலேயர்களிடம் இருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் காளையார் கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என்று ஆங்கிலேய படைகள் அறிவித்தன.
ஆசை, ஆசையாக கட்டிய கோபுரம் இடிக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால் இறுதியாக ஆங்கிலேய படைகளிடம் மருது சகோதரர்கள் சரணடைந்தனர். அதன்பின்னர் அவர்களை திருப்பத்தூரில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். 1801-ஆம் ஆண்டில் மருது பாண்டியர்கள் நடத்தியது தான் வெள்ளையர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போர் ஆகும்.
அவர்கள் தூக்கிலிடப்பட்ட இந்த நாள் தான் மண்ணுக்காக உழைக்க நாம் உறுதியேற்றுக்கொள்ள வேண்டிய நாளாகும். மருது பாண்டியர்களின் வீரத்தையும், தீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்; மண்ணைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.