" மீண்டும் பள்ளிக்கு செல்வோம்" -கேரள பெண்கள் நடத்திய சுவாரஸ்ய நிகழ்ச்சி.!
தென்காசி அருகே பாரம்பரிய உடை அணிந்து மீண்டும் பள்ளிக்கு செல்வோம் எனும் பிரச்சாரத்தை கேரள பெண்கள் நடத்தினர்.
தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆரியங்காவு பகுதியில்
செயல்பட்டு வரும் இரண்டு மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள உறுப்பினர் இணைந்து மீண்டும் பள்ளிக்கு செல்வோம் என்ற நிகழ்ச்சியை நடத்தினர்.
குறிப்பாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து கேரளாவின் பாரம்பரிய உடைகள் அணிந்து ஆரியங்காவு நெடுமங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகள் தினம் தோறும் பின்பற்றும் ஒழுக்க நெறிமுறைகளை கடைப்பிடித்தனர்.
பள்ளிக்கு சென்றவுடன் வரிசையாக நின்று உறுதிமொழி ஏற்று, தொடர்ந்து
வரிசையாக பள்ளி வகுப்பறைக்கு சென்று வாழ்க்கை நெறிமுறைகள் குறித்த பாடங்களை கற்றுக் கொண்டனர். மகளிர் சுயஉதவிக்குழுவில் உள்ள பெண்களின் ஒருவர், மற்ற பெண்களுக்கு வாழ்க்கை நெறிமுறைகள் குறித்தும், வாழ்க்கையில் சுய தொழில் செய்து எப்படி முன்னேறுவது என்பது குறித்த வகுப்புகளை நடத்தினர்.
தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் தங்களது முந்தைய வாழ்க்கை அனுபவங்கள் மற்றும்
தற்போதைய வாழ்க்கை அனுபவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகளிர் சுய உதவிக் குழுவினரின் இந்த மீண்டும் பள்ளிக்கு செல்வோம் என்ற நிகழ்ச்சியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்து பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.