"நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை இணைந்து போராடுவோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"வரவேற்பை ஏற்று வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இந்திய ஜனநாயகத்தை காக்க ஓரணியில் திரண்டு உள்ளோம். இந்திய கூட்டாட்சி தத்துவத்தை காக்க இந்த கூட்டத்தில் இணைந்துள்ளோம். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன்மூலம், நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறையும். இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நமது அதிகாரம், உரிமைகள், எதிர்கால நலன்களைப் பற்றியது. பிரதிநிதித்துவம் குறைவதால், நமக்கு தேவையான நிதியை பெறுவதற்குக்கூட போராட வேண்டிய நிலை வரும்.
நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும், நமது மக்களை பாதிக்கும் முடிவுகள் நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவை சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள், உழவர்கள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது பண்பாடு, அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலங்காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூகநீதி பாதிக்கப்படும்
ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எதையும் நாம் எதிர்க்கவில்லை.
ஆனால், அந்த நடவடிக்கை நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம். நாம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல, நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவானவர்கள்.
மத்திய அரசை வலியுறுத்துவது ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கூட்டு நடவடிக்கை குழு மிக அவசியம் என்று கருதுகிறேன். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை இணைந்து போராடுவோம்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.