"அய்யா வைகுண்டர் போதித்த வழி நடந்து மனிதம் காப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக அய்யா வைகுண்டரை பார்ப்பதாக கூறப்படுகிறது. இவரின் பிறந்த நாள் அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் இன்று (மார்ச் 4) கொண்டாடப்படுகிறது. அதன்படி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் அய்யா வைகுண்டரின் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டரின் 193-ஆம் பிறந்தநாள்! "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!" என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.