“குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” - தவெக தலைவர் விஜய்!
“நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நவ.14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று குழந்தைகள் தினத்திற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பல தரப்பு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் குழந்தைகள் தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;
“ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை, விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது.
நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்! குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.