"நிலையான உறுதியுடன் நம் கனவுகளைத் துரத்துவோம்" - முதலமைச்சர் #MKStalin
நிலையான உறுதியுடன் நம் கனவுகளைத் துரத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். ஆகஸ்ட். 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் துபாய் வழியாக நேற்று (ஆகஸ்ட் – 29ம் தேதி) அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தனர்.
சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது அமெரிக்க தொழிலதிபருமான நெப்போலியன் மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் வரவேற்றனர். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம் ஆடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், முதல் நாளான இன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், சென்னை, மதுரை மற்றும் கோவையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
இந்த நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில், “ஒரு உற்சாகமான மாலைப் பொழுதில், முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆற்றல் மிக்க விவாதங்களை நடத்தினோம்; எல்லையில்லா ஆற்றல் மற்றும் பரந்த வாய்ப்புகளின் நிலமான தமிழ்நாட்டிற்கு, உலகளாவிய முதலீட்டாளர்களை அழைத்தோம்; நிலையான உறுதியுடன் நம் கனவுகளைத் துரத்துவோம்!”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.