"புரி ஜெகநாதர் கோயில் சாவிகளை பிரதமரே கண்டுபிடிக்கட்டும்" - வி.கே.பாண்டியன்!
புரி ஜெகந்நாதர் கோயிலின் 'பொக்கிஷ 'அறையின் தொலைந்து போன சாவிகளை பிரதமர் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும், பிஜூ ஜனதா தள முக்கிய நிர்வாகியுமான வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் நேற்று 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
இதையடுத்து, 6ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், ஒடிசாவில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் என தெரிவித்தார். பிரதமர் மோடியின் பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும், பிஜூ ஜனதா தள முக்கிய நிர்வாகியுமான வி.கே.பாண்டியன் பிடிஐ நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
அளவற்ற அறிவாற்றலைப் பெற்றுள்ள பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவிகளை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அவரிடம் உள்ள எண்ணற்ற அதிகாரிகள் மூலமாக இந்தப் பணியை அவர் செய்தாக வேண்டும். பிரதமரின் அறிவாற்றல் ஒடிஸா மக்களின் வாழ்வு ஒளிமயமாக உதவட்டும்.
இதையும் படியுங்கள் : திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா – அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
கோயில் அறையின் சாவிகள் தொலைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில், பத்தாண்டு காலமாக கூட்டணி ஆட்சியின் போது பாஜக அமைச்சர்கள் இந்த விவகாரத்தைக் கையாண்டுள்ளனர். எனவே, தொலைந்த சாவிகளை பாஜக தலைவர்கள்கூட கண்டுபிடித்துக் கொடுக்கலாம். மாநில நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் தேதியில் புதையல் அறையின் கதவைத் திறக்க ஒடிஸா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, 40 ஆண்டுகள் கழித்து தற்போது புதையல் அறை திறக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடியும் கலந்துகொள்ள வேண்டும்"
இவ்வாறு வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.