#RainUpdatesWithNews7Tamil | 4-வது மாடியில் பார்க்கிங் செய்யப்படும் இருசக்கர வாகனங்கள்!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மின்தூக்கி மூலம் வாகனங்களை நான்காவது மாடியில் பார்க்கிங் செய்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது.
மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை நீடிக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மழை வெள்ளத்துக்கு அஞ்சி மின்தூக்கி மூலம் நான்காவது மாடியில் இரு சக்கர வாகனங்களை குடியிருப்புவாசிகள் நிறுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதேபோல், அடுக்குமாடியில் உள்ள ஒரு வீட்டின் ஹாலில் புல்லட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் புகைப்படமும் பரவி வருகின்றது.
நேற்றுமுதலே கார்களை பள்ளிக்கரணை, வேளச்சேரி மேம்பாலங்களில் மக்கள் நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இருசக்கர வாகனங்களை வீடுகளில் நிறுத்தி வருகின்றனர்.