மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி - மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நேத்ரோத்யா அமைப்பு கண்டனம்!
மத்திய பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேத்ரோத்யா அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது. இதன் ஒருபகுதியாக பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொருளாதாரா ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ம் தேதி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதேபோல தமிழ்நாட்டிற்கு எந்த புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை என திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனைக் கண்டிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு உரிய அறிவிப்புகள் வெளியாகாததால் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளார் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படும் அமைப்பான நேத்ரோத்யா அமைப்பின் நிறுவனரான கோவிந்த கிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு ₹1372 கோடிகளை ஒதுக்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு 2024-25 ஆண்டிற்கான பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து வெறும் ₹1225 கோடிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் மீது மத்திய அரசின் அக்கறையின்மை வெளிப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது” இவ்வாறு கோவிந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.