மழையால் வரத்துக் குறைவு! - கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை!
தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ள நிலையில், தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளிலும், பல்வேறு விளை நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை பொருள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காய்கறிகளின் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் வரத்து குறைந்ததால், காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட 35 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள் : படித்து எந்த பயனும் இல்லை... பஞ்சர் கடை வைக்கலாம்.. - கல்லூரி திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
வரத்து குறைவின் காரணமாக தக்காளி விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதே போல ஒரு கிலோ பச்சை மிளகாய் 90 ரூபாய்க்கும் ஒரு கிலோ கேரட் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.